மதுரை மாவட்டத்திற்கு தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.6.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் மூலம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டெருக்கு ரூ.4000 ஊக்கத்தொகையும், வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்க தொகையும் விவிவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்(பொ) கலைச்செல்வன் கூறியதாவது:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2020-21-ஆம் ஆண்டிற்கு மதுரை மாவட்டத்திற்கு ரூ.6.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தில் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய ரக காய்கறிகள், முருங்கை, மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு, பப்பாளி சாகுபடி, உதிரி மலர்கள், கிழங்கு வகை மலர்கள் மற்றும் மிளகாய் பரப்பு விரிவாக்கத்தில் 1,120 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.2.41 கோடி நிதி இலக்கும் ஒதுக்கப்பட்டு 40 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது.
காய்கறி பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதன் கீழ் வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய ரூ.2500 ஊக்க தொகையை ஒரு ஹெக்டருக்கு வழங்கப்படுகிறது.
தனி நபருக்கு நீர் அறுவடை அமைப்பு இனத்தின் கீழ் நீர் சேமிப்பு அமைப்பு அமைக்கவும், பாதுகாப்பான முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க பசுமைக்குடில் அமைத்தல், நிழல் வலைக்குடில் அமைத்தல் மற்றும் நிலப்போர்வை போன்ற இனங்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
பண்ணை இயந்திர மயமாக்கல் இனத்தில் கீழ் மினி டிராக்டர்கள், மற்றும் பவர் டில்லர்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீத மானியம் வரை அனுமதிக்கப்படும். இதற்காக மதுரை மாவட்டத்திற்கு ரூ.25.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை இனத்தின் கீழ் ரூ.14.20 லட்சம் நிதியும், இயற்கை விவசாயம் செய்யும் இனத்தின் கீழ் நிலையான மண்புழு உர உற்பத்தி அமைப்பு, மண்புழு உரப் படுக்கை அமைக்க 50 மூ மானியத்தில் ரூ.14.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஊக்க தொகையாக ரூ.4000 ஒரு ஹெக்டருக்கு வழங்கப்படுகிறது.
மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தும் இனத்தின் கீழ் தேனீ காலணிகள், தேனி பெட்டி, தேனி பிழிந்தெடுக்கும் இயந்திரம் 50 சதவீதம் மானியத்தில் அனுமதிக்கப்பட்டு ரூ.26.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனித வள மேம்பாட்டு இனத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி 100 சதவீதம் மானியத்தில் வழங்க ரூ.13.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதவீதம் மானியத்தில் குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் அறை போன்றவை செயல்படுத்தப்பட உள்ளது.
தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கறி விற்பனை வண்டி ரூ.11.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.