கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் மலர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக தங்கள் வாழ்வில் வாசமில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சிவகாமிபுரம், அருணாப்பேரி, சங்கரன்கோவில், செங்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் மலர் சாகுபடி நடைபெறுகிறது. மல்லிகை, கேந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி என பல்வேறு வகையான மலர் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அறுவடை செய்யப்படும் மலர்களை சங்கரன்கோவில், சிவகாமிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதில் இருந்து மலர் சாகுபடி செய்த விவசாயிகள், வியாபாரிகள், மாலை கட்டும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து கோயில் திருவிழாக்கள் நடைபெறாததாலும், சுப நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றதாலும் மலர்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், மலர்களை அறுவடை செய்யாமலேயே பல விவசாயிகள் விட்டுவிட்டனர். தற்போது தளர்வுகள் உள்ளதால் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். இருப்பினும் தேவை குறைந்துவிட்டதால் மலர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த 4 மாதங்களாக கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
வியாபாரிகள் கூறும்போது, “வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பூக்கள், மாலைகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலர்கள் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 125 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 250 ரூபாய்க்கும், அரளிப்பூ 80 ரூபாய்க்கும், கேந்தி 60 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 60 ரூபாய்க்கும், அரளிப்பூ 80 ரூபாய்க்கும், கனகாம்பரம் 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வீதி வீதியாகச் சென்று ஏராளமான வியாபாரிகள் பூ வியாபாரம் செய்து வந்தனர். விற்பனை இல்லாததால் பல வியாபாரிகள் பூ வியாபாரத்தை கைவிட்டு வேறு பொருட்களை வியாபாரம் செய்கின்றனர்.
மலர் மாலைகள் கட்டும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பல்வேறு தொழில்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள், மலர் வியாபாரிகள், மாலை கட்டும் தொழிலாளர்கள் வாழ்வில் கடந்த 4 மாதங்களாக வாசமில்லை. வேதனையே மிஞ்சுகிறது” என்றனர்.