மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இலவச மின்சாரப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் சார்பில் தமிழகமெங்கும் விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம், செண்பகபுதூர் ஊராட்சி நடுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாரனூர் நடராஜ் என்பவர் முதல் கையெழுத்திட, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையெழுத்திட்டனர்.
1970-களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று 90 நாள் சிறைவாசம் அனுபவித்தவர் மாரனூர் நடராஜ். கீழ்பவானி முறையீட்டு முதல் பாசன சபையின் தலைவர் பதவியில் 20 வருடங்களாக நீடிக்கிறார்.
அவருடன் ஒரு பேட்டி:
1970-களில் நடந்த விவசாயிகள் போராட்டம் பற்றிச் சொல்லுங்கள்?
1970-ல் ஒரு யூனிட் மின்சாரக் கட்டணத்தை 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி. விவசாயிகள் போராட்டம் வெடிக்க, அரசு 1 பைசா மின்கட்டணத்தைக் குறைத்து, வசூலையும் தற்காலிகமாக நிறுத்தியது. பிறகும் 9-லிருந்து 12 பைசாவிற்குக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கெதிராகவும் விவசாயிகள் கிளர்ந்தெழ, போலீஸ் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. பிறகு கட்டணத்தை 1 பைசா குறைத்து 11 பைசாவாக நிர்ணயித்தது. இப்போராட்டத்தைக் கோவை மண்டல விவசாயிகள், 1 பைசா மின் கட்டண உயர்வுக்காக நடந்த போராட்டம் என்றே இன்றும் குறிப்பிடுகிறோம்.
இதை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டங்கள் நடந்தன. நான் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டேன். என்னுடன் சேர்த்து 85 பேர் கைதானோம். அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொன்னால் விட்டுவிடுவதாக அதிகாரிகள் சொன்னார்கள். அதை நம்பி 7 பேர், கையெழுத்துப் போட்டுக்கொடுத்து வெளியில் போனார்கள். மீதி 78 பேரும் உறுதியாக நின்றோம்.
மொத்தம் 90 நாள் சிறைவாசம். கோவை சிறையில் 15 நாள் இருந்தோம். மீதி 75 நாட்கள் திருச்சி சிறையில். அந்தச் சமயத்தில் கோவை கலெக்டர் அலுவலக வாசலில் 10 ஆயிரம் கட்டை வண்டிகளை அவிழ்த்து விட்டார்கள் விவசாயிகள். அதைப் பார்த்துவிட்டு மாவட்ட நிர்வாகமே தவித்துப் போய்விட்டது. அரசாங்கம் மசிந்துவிடும்; கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நம்மை விடுதலை செய்துவிடுவார்கள் என எல்லோரும் நம்பினோம். ஆனால், அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை. அப்புறம் பெருமாநல்லூர்ல துப்பாக்கிச் சூடு நடந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அதுவும் பெரிய பிரச்சினை ஆனது. அதற்கும் அரசாங்கம் இறங்கி வரவில்லை.
அதற்குப் பிறகுதான் விவசாயிகள் போராட்டத்துக்குத் தானே தலைமை ஏற்கப் போவதாகக் காமராஜர் அறிவித்தார். உடனே, அரசாங்கம் பணிந்தது. ராத்திரியோட ராத்திரியா எங்களை ரிலீஸ் செய்தார்கள். ஏற்றிய மின் கட்டணத்தையும் ரத்து செய்து மேலும் ஒரு பைசாவைக் குறைத்தனர். அப்புறம் இலவச மின்சாரம் ஆகியது. போராட்டத்தில் கலந்து கொள்ளும்போது எனக்கு 23 வயது இருக்கும்.
அந்த அளவுக்கு அன்றைக்கு இளைஞர்களிடமே எழுச்சி இருந்ததா?
அப்படிச் சொல்ல முடியாது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ரொம்பச் சின்னப் பையன் நான் மட்டும்தான். பெரும்பாலானோர் 30, 40 வயசு தாண்டியவர்கள். அதில் பலர் இப்போது உயிரோடு இல்லை.
இப்ப இலவச மின்சாரம் ரத்தானாலோ, அரசாங்கமே மின் கட்டணம் மானியமா தந்துவிடும் என்று சொல்லி தனியார்கிட்ட மின்வாரியத்தைக் கொடுத்துவிட்டாலோ, அதே அளவு எழுச்சியான போராட்டம் விவசாயிகள் மத்தியில் வரும்னு நம்புகிறீர்களா?
நிச்சயமாக. அப்போது விவசாயிகளுக்கு ஒரு பைசா அதிகரிப்பு என்பதே தாங்க முடியாத விஷயமாக இருந்தது. இப்போது அதைவிட நிலைமை மோசம். விவசாயமே செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். இப்போது கையெழுத்து இயக்கம் நடத்தும் விவசாயிகளிடம் அதே பழைய எழுச்சியைக் காண முடிகிறது.
இடுபொருள் செலவு, ஆள் பற்றாக்குறை, கட்டுப்படியான விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் உழவுத் தொழிலை விட்டு வெளியேறும் மனநிலையில், கடும் விரக்தியில் விவசாயிகள் இருக்கிறார்கள். இலவச மின்சாரம் ரத்தானால் எல்லோருமே விவசாயத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனைப்படுகிறார்கள். ஏன்னா, இதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரம்.
ஆனா, இப்போதெல்லாம் ஒரு நாள்கூட ஜெயிலுக்குச் செல்ல மக்கள் தயாராக இல்லையே? எப்படி இதை நடத்தப் போகிறார்கள்?
வழக்கமான போராட்டங்களைப் பொறுத்தவரைக்கும் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நானும் பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். அப்போது சம்பிரதாயமாகக் கைது செய்து மதியம் மண்டபத்தில் தங்க வைக்கிறார்கள். சாப்பாடு கொடுத்து, மாலையில் விட்டுவிடுகிறார்கள். ஆனால், இந்தப் போராட்டம் அப்படி சாதாரணமா இருக்காது என்று நினைக்கிறேன்.
பிரச்சினை எந்த அளவுக்கு வீரியம் கொள்கிறதோ, அந்த அளவுக்கு மக்களிடமும் எழுச்சி இருக்கும். இப்போதே லட்சக்கணக்கான விவசாயிகள், மழை இல்லாமல் நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு கூலி வேலைக்குப் போகிறார்கள். இனி, ‘மின்சாரத்துக்கு நீ பணம் கட்டிடு. அதை மானியமா அரசு தந்துடும்’னு சொன்னா விவசாயி எப்படிக் கேட்பான்? எப்படிக் கையிலிருந்து கட்ட முடியும்? அத்துடன் மின்வாரியத்தைத் தனியாருக்குக் கொடுத்தால் அதோட நிலை என்னவாகும் என்று எல்லோருக்குமே தெரியும். அதனால, பழைய போராட்டத்தின் வீரியம் இப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்!
இவ்வாறு மாரனூர் நடராஜ் தெரிவித்தார்.