புதுச்சேரியில் இன்று புதிதாக 58 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 18) புதிதாக 58 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,898 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 804 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 801 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது புதுச்சேரியில் 51 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 58 பேருக்குக் (7.2 சதவீதம்) கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 39 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மரிலும், 7 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 2 பேர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆண் நபர் ஏற்கெனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 13 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தீவிரமடைந்து நேற்று (ஜூலை 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் கடந்த 5 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கும் ஏற்கெனவே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய் இருந்தது.
மேலும், கவிக்குயில் நகரைச் சேர்ந்த 42 வயது ஆண் நபர் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தார். நேற்று இரவு அவர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தார். தற்போது அவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,898 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 27 பேர், ஜிப்மரில் 17 பேர், கோவிட் கேர் சென்டரில் 4 பேர், ஏனாமில் 4 பேர் என மொத்தம் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,066 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 29 ஆயிரத்து 851 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 27 ஆயிரத்து 542 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 302 பரிசோதனைகளுக்கு முடிவு வர வேண்டி இருக்கிறது".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.