தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பாஜக அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் நடத்தப்படாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் பருவத்தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை. பருவத்தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்கள் தாமே முடிவெடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், உயர்கல்வித் துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, இறுதிக் காலத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தில், 'செப்டம்பர் மாதத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைப் போலவே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியுள்ளார். மேலும், ஐஐடி உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கியுள்ள நிலையில், பிற பல்கலைக்கழகங்களும் அதையே பின்பற்றி ஏன் பட்டம் கொடுக்க முடியாது?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக டெல்லி மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று பல்கலைக்கழக வேந்தரும், மாநில ஆளுநருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்படாது என்பதிலிருந்து அரசு பின்வாங்காது என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 'உயர்கல்வி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் பல்கலைக்கழக இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்தியே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடர் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கும் சூழலில், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பாஜக அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது.
உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பாஜக அரசின் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.
மகாராஷ்டிரா, டெல்லி மாநில அரசுகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.