படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

சாத்தான்குளம் வழக்கு: மதுரை மத்திய சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி விசாரணை

என்.சன்னாசி

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்களிடன் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் கடந்த 3 நாட்களாக தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

முதலில், சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அவர்களது கடைக்கு அருகேயுள்ள கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலரும், வழக்கில் முக்கிய சாட்சியுமான ரேவதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்தார்.

பின்னர், தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் பாலசுப்ரமணியன், வெங்கடேஷ், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணை அதிகாரி குமார் தனது விசாரணை மேற்கொண்டார். கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறைக் காவலர்கள் வேல்முருகன், செந்தூர்ராஜா, மாரிமுத்து மற்றும் தலைமைக்காவலர் அழகர்சாமி ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

மூன்று நாள் விசாரணை முடிவில், மதுரை மத்திய சிறையிலும் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஜூலை 18) காலை மதுரை மத்திய சிறையில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளார். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. பின்னர் டிஎஸ்பி குமார் அளித்திருந்த பேட்டியில், "சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி விசாரணை நடைபெற்று வருகிறது. 10 காவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

தேவைப்பட்ட இடங்களில் சில வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளேன். மொத்தம் 8 நாட்கள் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றுடன் 6 நாட்கள் முடிந்துவிட்டது.

விசாரணையின் முடிவு அறிக்கைகள் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரி சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT