சு.கோமதிவிநாயகம்
ஆங்கிலேயரை எதிர்த்து முதல் குரல் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாகக் கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் சிலை அமைத்து 50 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன.
கி.பி. 18-ம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங் குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன் முதலாகக் குரல் கொடுத்தார். ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து கயத்தாறில் தூக்கிலிட்டனர்.
1959-ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வீரபா ண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. இதில், நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் ஜொலித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசிய ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி’ என்ற வசனம் இன்றளவும் பிரபலம்.
கயத்தாறில் நெல்லை-மது ரை நெடுஞ்சாலையை ஒட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலத்தை நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கி னார். அங்கு வீரபாண்டிய கட்ட பொம்மனின் 8 அடி உருவச் சிலையை நிறுவினார்.
இதன் திறப்பு விழா 16.7.1970-ல் நடந்தது. அன்றைய எம்.பி. என்.சஞ்சீவரெட்டி தலைமையில், முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இச்சிலையை நிறுவி கடந்த 16-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1999-ல் இதை தமிழக அரசிடம் சிவாஜி கணேசன் வழங்கினார்.
இந்த சிலை அருகேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வடிவிலேயே ரூ.1.20 கோடியில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. மணிமண்டபத்தில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் கட்டபொம்மனின் வெண்கலச் சிலை வைக்கப்பட் டுள்ளது.
இது குறித்து பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை வீரசக் கதேவி ஆலயக் குழுத் தலைவர் எம்.முருகபூபதி கூறியதாவது:
அனைத்து சமுதாய மக்களுக்கும் இணக்கமான அரசனாக வீரபாண்டிய கட்ட பொம்மன் இருந்துள்ளார். அவர் மனிதாபிமானமிக்கவராகவும், உண்மையான தேசப்பற்றா ளராகவும் இருந்துள்ளார் என ஆங்கிலேயர்களே பதிவு செய்துள் ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் இடைவாரை (பெல்ட்) உருவினால் அது வாளாக மாறிவிடும். அது போன்று நுட்பத்துடன் வாளை உருவாக்கி வைத்திருந்தார். இது அவரது வீரத்துக்கு சாட்சி. அது இன்னும் இங்கிலாந்து அருங்காட்சியகத்தை அலங்கரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.