கந்த சஷ்டி கவசம் குறித்து யூடியூப்-ல் அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
யூடியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் பற்றியும் மோச மாக விமர்சித்து வீடியோ வெளியிடப் பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாஜக உட்பட பல்வேறு தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். முதல் கட்டமாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன்(49) கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான அவதூறு வீடியோவின் தொகுப்பாளர் எனப்படும் சுரேந்திரன்(36) நேற்று முன்தினம் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தகவலறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அங்கு சென்று, அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்திரன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு, பாஜக வழக்கறி ஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் சுமார் 100 பேர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டனர்.
இதற்கிடையே, தி.நகரில் உள்ள சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலின் அலுவலகத்துக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.