சென்னை சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி இறந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 13-க்கு உட்பட்ட சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் குபேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 15-ம் தேதி, கழிவுநீர் தொட்டி அடைப்பை சீர் செய்ய இறங்க முயன்ற நாகராஜ், சயின்சா ஆகிய இருவர் விஷவாயு தாக்கி இறந்தனர்.
இந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த சம்பவத்தில் இறந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பவத்துக்கு காரணமான குபேந்திரன் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க குடிசை மாற்று வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.