படம்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

ரயில்களைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

கே.கே.மகேஷ்

இந்தியா முழுவதும் 109 வழித்தடங்களில் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. - எல்.ஆர்.எஸ். தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் எஸ்.ஆர்.எம்.யுவின் 18 கிளைகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. போராட்டத்துக்கு, ஓடும் தொழிலாளர் பிரிவுத் தலைவர் ஏ.எம்.எம்.ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் என்.அழகுராஜா முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யு. மதுரை கோட்டச் செயலாளர் ஜெ.எம்.ரபீக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அப்போது, "109 வழித் தடங்களில் லாபகரமாக இயங்கும் 151 பயணிகள் விரைவு ரயில்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது. சரக்குப் போக்குவரத்தையும், வருவாயையும் இரட்டிப்பாக்குவதாகப் போலியான காரணத்தைக் கூறி ரயில்வே சரக்குப் போக்குவரத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். வேலைப்பளு நாளுக்கு நாள் கூடி கொண்டிருக்கும் சூழலில் 2 ஆண்டுகளாக நிரப்பப்படாத 50% காலியிடங்களைச் சரண்டர் செய்யக்கூடாது" என்று அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஆர்.எம்.யு. ஓடும் தொழிலாளர் பிரிவு உதவி கோட்டச் செயலாளர்கள் பேச்சிமுத்து, நாகராஜ் பாபு, வெங்கடேஸ்வரன், கருப்பையா, ஜெய கண்ணன் உள்பட சுமார் 100 தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்துப் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT