செய்தியாளர்கள் சந்திப்பில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் 
தமிழகம்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும்; கார்த்தி சிதம்பரம் ஆரூடம்

ந. சரவணன்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று (ஜூலை 17) காரில் சென்றார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராஜீவ் காந்தி சிலை அருகே கார்த்தி சிதம்பரம் வந்த போது, அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால், அங்கு வந்த காவல்துறையினர் ஊரடங்கு இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்கள் கலைந்து சென்றனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

"கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து கடவுள்களை குறிப்பாக நான் வணங்கும் முருகப்பெருமானை இழிவுப்படுத்துவது என்பது கண்டித்தக்கச் செயலாகும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயன் இல்லை. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும்.

கரோனா ஊரடங்கால் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தொழில் பாதிப்பு நிவாரணமாக வழங்க அரசு முன் வர வேண்டும்.

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி இழிவுப்படுத்தியது வேதனை அளிக்கிறது. பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நபர்கள் தான் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்திருப்பார்கள். பெரியார் சிலை மீது கருப்பு சாயம் பூசிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை திணிக்க முயற்சி நடக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் விலகி இருப்பது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாட அரசு அனுமதி வழங்க வேண்டும்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விடுதலை ஆகி வெளியே வந்தால் அதிமுக அவரது தலைமையின் கீழ் செல்லும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தடையை மீறி கூட்டமாக காங்கிரஸார் கூடியதாக கார்த்தி சிதம்பரம், உள்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT