மதுரை அழகர்கோவிலில் ஆடித் திருத்தேரோட்டம் நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்த பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பொருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் மற்றும் ஆண்டாளால் பாடப்பட்ட திருத்தலம்.
இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை மாத உற்சவம் மற்றும் ஆடி பிரமோத்சவம் திருவிழா புகழ்பெற்றது. சித்திரை விழாவின் போது கள்ளழகர் மதுரை நகருக்குள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கோவில் வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது.
ஆடி பிரமோத்சவ விழா 10 நாள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வு ஆடித் தேரோட்டம். முழு நிலவு நாளில் தேரோட்டம் நடைபெறும். சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் அரை கி.லோ மீட்டருக்கு தேர் வலம் வந்து நிலைக்கு வரும்.
மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆடி பிரமோத்சவா விழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆடித் திருத்தேரோட்டத்துக்கு கோவில் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகிறது.
தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு சிறு கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் பூரி ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரை நடத்த உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதேப்போல் அழகர்கோவிலில் முழுநில நாளில் ஆடித் தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.