புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் இறால் பண்ணை குட்டையில் இருந்த நீரை மேகம் உறிஞ்சிய சம்பவத்தால் அப்பகுதியில் வீசிய காற்று, மழையால் வீடுகள் சேதமடைந்தன.
புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திராவின் கோதாவரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. தற்போது ஏனாம் பிராந்தியத்தில் மழை பொழிவு உள்ள சூழலில், இன்று (ஜூலை 17) மதியம் திடீரென் அய்யனார் நகர் பகுதியில் சுழல் காற்று வீசியது. அப்போது அங்கு இருந்த கூட்டுறவு இறால் பண்ணை வளர்க்கும் குட்டையில் இருந்த நீரை மேகம் உறிஞ்சியது.
இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், பலத்த காற்று காரணமாக வீடுகளும் சேதமடைந்துள்ளது. வழக்கமாக, கடல் பகுதிகளில் இருக்கும் நீரை மேகம் உறிஞ்சும் நிலையில் தற்போது நிலப்பரப்பில் இருந்த நீரை உறிஞ்சியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அப்பகுதியினர் கூறுகையில், "திடீர் சுழல் காற்று இறால் குட்டையில் இருந்த நீரை உறிஞ்சியது. பண்ணை முற்றிலும் சிதைந்தது. பண்ணையை சுற்றியுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டன. ஏனாம் பகுதியில் அவ்வப்போது இதுபோன்று சுழல்கள் கடல் பகுதியில் ஏற்படும்" என்று தெரிவித்தனர்.
ஏனாம் மீனவர்கள் தரப்பில் கூறுகையில், "கடலில் மீன்பிடிக்க செல்லும்போது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் இதை பல முறை பார்த்துள்ளோம். அறிவியல் மொழியில் இதனை 'டோர்னடோ' (Tornado) என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது, தமிழில் நீர்த்தாரை. ஆனால், நிலப்பகுதியில் இப்போதுதான் பார்க்கிறோம். காலநிலை மாற்றம்தான் முக்கியக்காரணம். தரையின் மேல் வீசும் காற்று குளிர்ந்தும், கீழ் பகுதியில் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால் நீர்த்தாரை நிகழ்வு நடக்கும். இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும்" என்று கூறினர்.