தமிழகம்

16 மணி நேரம் மின் தடை ஏற்படுத்திய திமுக மின் கட்டணத்தை எதிர்த்துப் போராட தகுதி இல்லை: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

இ.மணிகண்டன்

16 மணி நேர மின் தடையை ஏற்படுத்தி தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுக, மின் கட்டணத்தைக் காரணமாக வைத்து போராட்டம் நடத்த தகுதி கிடையாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு விருதுநகரில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் அளித்தப் பேட்டியில், "பிரச்சினைகள் வராதா என்று காத்திருக்கும் கூட்டம் தான் திமுக கூட்டம். தினமும் ஓர் அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களை கொடுத்து அரசியல் செய்து வருகின்றார்.

16 மணி நேர மின் தடையை ஏற்படுத்தி தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுக மின் கட்டணத்தை காரணமாக வைத்து போராட்டம் நடத்த தகுதி கிடையாது.

தமிழக மக்கள் மீதும் தமிழ் மீதும் பாரதப் பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். தமிழுக்கு எதிராக மோடி ஒரு கணமும் செயல்பட மாட்டார். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

ஆகையால் மத்திய மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால்தான் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

சிலர் போலியான சங்கத்தை வைத்துக்கொண்டு ஆவின் நிர்வாகத்தை பற்றி குறைகூறி வருகின்றனர். கரோனா பாதிப்பு வந்தததில் இருந்து கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது.

33 லட்சம் லிட்டர் வந்த கொள்முதல் இன்று 40லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.இதனால் பாலை பவுடர் ஆக்கி வி்ற்பனை செய்து வருகின்றோம்" என்றார்.

SCROLL FOR NEXT