ஈரோடு மாவட்டத்தின் முதன்மை தொழில்களான வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இரண்டிற்கும் முழு கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் சிறுகுறு நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலித்து, தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கு அரசு துணை நிற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இது ஒரு சோதனையான நேரம். இன்று உலகையே அதிர வைக்கின்ற கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிலுள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையினாலும், ஈரோடு மாவட்ட மக்கள் இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்ததாலும், இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால் நம் வாழ்க்கைக்கே இதனால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய். இந்த 4 மாத காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த போது, ஏற்கெனவே ஏதாவதொரு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உடனடியாக கரோனா சிகிச்சை பெறாமல் இருப்பதினால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே, ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள், கரோனா வைரஸ் நோய்த் தொற்றிற்கான அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் உயிர் பிழைத்துக் கொள்ளலாம். இதுவரை 67 விழுக்காடு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 1.56 லட்சம் நபர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
நாம் பரிசோதனையை அதிகமாக மேற்கொண்டு உரிய சிகிச்சை அளித்த காரணத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, சுமார் 2,250 நபர்கள் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் சுமார் 11 ஆயிரம் நபர்கள் இறந்திருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு ஒரு பெரிய சோதனை, மிகப் பெரிய சவாலாக உள்ளது. தொழில் மீண்டும் துவங்க வேண்டும், இயல்பு நிலைக்கு வரவேண்டுமென்பதற்காக மத்திய அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அளித்திருக்கின்றார்கள். ஈரோடு மாவட்டத்தில் 8,329 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களுக்காக சுமார் 350 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு இந்த கடனுதவிகள் பேருதவியாக இருக்கும்.
இங்கே பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். அரசாங்கம் நிதிச் சுமையில் இருந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முதன்மை தொழில்களானா வேளாண்மை மற்றும் ஜவுளித் தொழில்கள் இரண்டிற்கும் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் வைத்த கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலித்து, வேண்டிய அளவிற்கு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் அரிய பல கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அரசு உங்களது கருத்துக்களை எடுத்துக் கொண்டு அதற்குண்டான முயற்சியை எடுக்குமென்று தெரிவித்துக் கொள்கிறேன்.
குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தைக் கொண்டுவந்து, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்து, முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு ஏரிகள், குளங்களை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து வைக்கவேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில், பவானி சாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு அம்மாவினுடைய அரசால் உத்தரவிடப்பட்டு, அந்தப் பணிகள் துவங்கவிருக்கின்றது.
குண்டாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். மேலும், ஈரோடு மாவட்டத்திற்கான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, புயல் வெள்ளம் வந்தாலும் மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு வசதிகள் செய்து கொண்டிருக்கிறோம்.
ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவு பெற்று உங்களுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கும். ஈரோடு மாவட்டத்திற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (Super Speciality Hospital) கொடுத்துள்ளோம். காளிங்கராயன் ஹைவே-யிலிருந்து திண்டல்பாறை வரை உயர்மட்டப் பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் பல்வேறு உயர்மட்டப் பாலங்கள் வரவிருக்கின்றன. பல ரிங் ரோடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக விரிவாக்கத்திற்கான கட்டடப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல பணிகள் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்னும் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; மேலும், பல பணிகள் தொடங்கவிருக்கிறன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல வகைகளிலும், ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் பேசினார்.