தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த சட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் அமல்ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலுக்கு மிக அருகாமையில் அமைந்திருப்பதால் ராமேஸ்வரத்தில் பெரும்பாலான இடங்களில் உப்பு தண்ணீரே கிடைக்கும். சில இடங்களில் மட்டுமே குடிப்பதற்கு ஏற்ற நீர் கிடைக்கிறது.
தமிழகத்தில் 2003-ம் ஆண்டின் நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் உரிய திருத்தங்கள் செய்வதற்காக 2013-ல் திரும்ப பெறப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நிலத்தடி நீர் பாதுகாப்பு தொடர்பாக எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது அமலில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பு தொடர்பான அரசாணையில், கடலோரப் பகுதியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிற்குள் நிலத்தடி நீரை எடுக்க உரிமம் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ராமேஸ்வரத்தில் கடல் பரப்பில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்திற்குள் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் மெய்யம்புலி, நொச்சிவாடி, செம்மடம், ராமேஸ்வரம் ஆகிய 4 இடங்களில் மாநில நிலத்தடி நீர் மற்றும் நீர் வள ஆதார மையம் மற்றும் தென் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால் ராமேஸ்வரம் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுவர்.
எனவே, மெய்யம்புளி, நொச்சிவாடி, செம்மடம், ராமேஸ்வரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய சட்டம் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், பயன்படுத்துவதை முறைப்படுத்தவும் எப்போது சட்டம் நிறைவேற்றப்படும்? என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.