கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தாலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக, டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், "கோவை சுந்தராபுரத்தில் பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்களை அவமதிப்பதன் மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.