தமிழகம்

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டத் தலைமை மருத்துவமனை அமைத்திடுக; அரசுக்குக் கோரிக்கை

கரு.முத்து

புதிதாக உதயமாகி இருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்டத் தலைமை மருத்துவமனையை சீர்காழியில் அமைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்திற்கான தனி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல்வேலியைப் பிரித்து தென்காசி, விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுவதற்கான அரசாணை கடந்த ஏப்.8-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத் தனி அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் லலிதாவை சீர்காழி நலம் பாரம்பரிய அறக்கட்டளையினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர்.

அந்த மனுவில், ’’சீர்காழியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய்க் கோட்டம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுக்கா அமைத்திட வேண்டும், மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவ கல்லூரியையோ அல்லது மாவட்டத் தலைமை மருத்துவமனையையோ சீர்காழியில் அமைத்திட வேண்டும் ’’ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

SCROLL FOR NEXT