கோவையில் பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவிச் சாயம் பூசியதைக் கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.
சிலை மீது காவிச் சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறும்போது, "பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, அவமதித்த சமூக விரோத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சில சமூக விரோதிகள், பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளால் பெரியாரின் புகழை குலைக்க முடியாது.
அதேசமயம், இத்தகு நிகழ்வுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. பெரியார் சிலையை அவமதித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்கள் மீதும், அதற்கு தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, "கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து, பசியால் தவிக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல், மக்களை திசை திருப்புவதற்காக இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார், அவரது தத்துவங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே இச்செயல் காட்டுகிறது. தமிழகத்தில் ஒருபோதும் காவி வரமுடியாது என்பதால், பெரியார் சிலையைக் குறிவைக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதேபோல, பல்வேறு கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மதிமுக, தபெதிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடததப்பட்டன.