ஈரோட்டில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி ரூ.151.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (17-ம் தேதி) காலை 9.45 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.73 கோடி மதிப்பீட்டில், 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.
மேலும், ரூ.76.12 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி, 4, 642 பயனாளிகளுக்கு ரூ.53.71 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்வில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆவணப்படத்தை முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆட்சியர் சி.கதிரவன், எஸ்பி தங்கதுரை, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.