பங்கஜ கஸ்தூரி மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஜே.ஹரீந்திரன் நாயர்உருவாக்கிய ‘ஜிங்கிவிர்-ஹெச்’(ZingiVir–H) மாத்திரை 7 பொருட்களின் கலவையால் ஆன மூலிகைதாது மருந்து ஆகும். கேரள அரசின் மருந்து உரிமம் பெற்றுள்ள இந்த மாத்திரை, கரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
112 நோயாளிகளுக்கு மற்றமருத்துவ முறைகளுடன் இணைந்து துணை சிகிச்சையாகவும், 135 நோயாளிகளுக்கு தனிசிகிச்சையாகவும் இது தரப்படுகிறது. இந்நிலையில், இடைக்கால சோதனை முடிவுகளை பங்கஜ கஸ்தூரி வெளியிட்டுள்ளது.
துணை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 42 பேரில் 20 பேருக்கு போலி மருந்து (பிளேஸ்போ) தரப்பட்டது. ஜிங்கிவிர்-ஹெச்தரப்பட்ட 22 பேருக்கு தொற்றுபாதிப்பு நீங்கியதாக ஆர்டிபிசிஆர்சோதனையில் கண்டறியப்பட்டது. அவர்கள் 4-வது நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘இதுவரை கிடைத்த முடிவுகள்நம்பிக்கை அளிக்கும் வகையில்,நேர்மறையாக வந்துள்ளன. அங்கீகாரம் கிடைத்ததும், நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்காக இந்த மாத்திரையை வழங்க தயாராக உள்ளோம்’’ என்று ஹரீந்திரன் நாயர் கூறினார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஷான் சசிதரன், மருத்துவ சோதனை ஒருங்கிணைப்பாளர் கே.பி.சீனிவாசகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 5 உறுப்பினர்கள் கொண்ட தன்னாட்சி தகவல் தரவு கண்காணிப்பு குழு மதிப்பீடு செய்ததை தொடர்ந்து, இடைக்கால முடிவுகள் ஒப்புதலுக்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.