யூ-டியூப் சேனல் ஒன்றில் முருகரின் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த சேனலின் நிர்வாகி சுரேந்தர் நடராஜனை கைது செய்யக் கோரி பாஜக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனலை தடை செய்து, அதன் நிர்வாகிகளை கைது செய்யகோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் தங்கள் வீடுகள் முன்பு முருகர் படம் வைத்தும், கந்த சஷ்டி கவசம் பாடலை பாடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தின் முன்பு முருகர் படத்துடன் பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆகியோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு முருகர் படம் வைத்து பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் தரனுடன் கந்த சஷ்டி கவசம் பாடலைப் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.