கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

நோய் அறிகுறிகளைப் புறக்கணித்து மருத்துவரை ஆலோசிக்காமல் சுய மருத்துவம் எடுப்போரே அதிகம் பாதிப்பு; கிரண்பேடி

செ.ஞானபிரகாஷ்

நோய் அறிகுறிகளைப் புறக்கணித்து மருத்துவர்களை ஆலோசிக்காமல் வீட்டிலேயே சுய மருத்துவம் எடுத்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் கண்டறிந்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் இன்று (ஜூலை 16) புதிய உச்சமாக 147 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட வாட்ஸ் அப் தகவல்:

"கரோனா அறிகுறி இருந்தாலும் தாமாக முன் வந்து மருத்துவமனைகளில் தகவல் சொல்லத் தவறியவர்கள்தான் உயிர் பிழைக்காமல் இறந்தவர்கள் என்பதை ஆய்வறிக்கையின் வழியாகக் கண்டறிந்துள்ளோம். எனவே, இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் நோய் அறிகுறிகளைப் புறக்கணித்தனர் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் வீட்டிலேயே சுயமாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக முதன்மைப் பராமரிப்பு மையத்தில் தகவல் தெரிவிக்கவும். இந்தத் தகவலின் வழியாக மருத்துவப் பயிற்சியாளர்கள் உங்களுக்குத் தேவையான சிகிச்சையை உடனடியாகத் தொடங்க முடியும்.

நோய் அறிகுறியின் ஆரம்பத்திலேயே தகவல் தெரிவிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமான செயல் என்பதை அனைவரும் உணர வேண்டும். தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரோனா கால சூழ்நிலையை மாற்றுவதற்கு நிர்வாகத்திற்கு உதவுங்கள்".

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT