தமிழகம்

தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

செய்திப்பிரிவு

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூலை 17) தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவு மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:

திருவாடானை (ராமநாதபுரம்) பகுதியில் 9 செ.மீ., புதுக்கோட்டையில் 5 செ.மீ, சின்னக் கல்லாற்றில் 5 செ.மீ., திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (சிவகங்கை) பகுதிகளில் 4 செ.மீ., வால்பாறை, ஆர்எஸ் மங்கலம், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), தேவாலா ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. அளவில் மழை பதிவானது.

ஜூலை 16-ம் தேதி (இன்று) வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 16, 17-ம் தேதிகளில் தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு, வடகிழக்கு, அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தெற்கு குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, லட்சத் தீவு மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 18, 19-ம் தேதிகளில் தென்மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT