பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 85% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாம்பலம் மாநகராட்சிப் பள்ளி 100% தேர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,675 மாணவர்கள், 2,973 மாணவியர்கள் என மொத்தம் 4,648 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,306 மாணவர்கள், 2,682 மாணவியர்கள் என மொத்தம் 3,988 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.80 ஆகும்.
கணினி அறிவியல் பாடத்தில் 6 மாணவ /மாணவியர்கள் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 6 மாணவ, மாணவியர்கள் 550 மற்றும் 550-க்கும் மேல் மதிப்பெண்களும், 53 மாணவ, மாணவியர்கள் 500க்கும் அதிகமான மதிப்பெண்களும், 219 மாணவ, மாணவியர்கள் 450க்கும் அதிகமான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், மேற்கு மாம்பலம், சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது.
மேலும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் ஆணையர் பிரகாஷ்,தெரிவித்தார்”.
இவ்வாறு இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.