ஆவுடையார்கோவில் அருகே சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விசாரணைக் கைதி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 7 வயதுச் சிறுமியை ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற சாமுவேல் (27), 2 வாரங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்தார். பின்னர், சடலத்தைக் கண்மாய் கரையோரம் உள்ள கருவேலங் காட்டுக்குள் வீசிச் சென்றார். இந்தத் துயரமான சம்பவம் தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஏம்பல் காவல்துறையினர் ராஜா என்ற சாமுவேலைக் கைது செய்து புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா நேற்று (ஜூலை 15) சேர்க்கப்பட்டார். திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா இன்று (ஜூலை 16) தப்பி ஓடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு புதிதாகப் பொறுப்பேற்ற எஸ்.பி. பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில், ராஜாவைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.