தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக சிபிஐ தெரிவிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது.
மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிஐபி அலுவலகத்தில் கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். பின்னர் அவர்களை சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் காரில் அழைத்துச் சென்று விசாரித்து, பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.
இருவரும் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பதை காட்சி வடிவில் நடிக்கச் செய்தும் விசாரித்தனர். நேற்று இரவு அவர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடமும் தந்தை, மகனை இறக்கும் வகையில் தாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதா? இதில் வேறு எதுவும் வலுவான காரணம் உண்டா? அரசியல் பின்னணி உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் தனித் தனியே துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களிடம் தனித் தனியாக எழுத்துப் பூர்வமான வாக்குமூலமும் பெற்றதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
ஜூலை 16 மாலை மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தியபின், மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து இவ்வழக்கில் மேலும் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால்துரை உட்பட 5 காவலர்களையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐ நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
இதற்கிடையில், தந்தை, மகன் கைதான அன்று( ஜூன்19) சிறையில் அடைப்பதற்கு முன்பு, மருத்துவச் சான்றிதழ் வழங்கிய சாத்தான்குளம் பெண் மருத்துவர், கோவில்பட்டி சிறைக்குச் சென்று இருவருக்கும் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறையில் இருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தந்தை, மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் சிபிஐ விசாரிக்கிறது.
இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் விசாரித்தபோது,‘‘ போலீஸ் காவலில் எடுத்தவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். சிபிஐ அலுவலகத்திலும் வைத்து விசாரிக்கப் பட்டது. இதனடிப்படையில் அவர்களிடம் வாக்குமூலமும் பெறப் பட்டுள்ளது. தேவையெனில் மேலும் 5 காவல்துறையினரை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.