மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்கள் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு தனி வார்டு அமைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். வார்டுகளில் இந்த நோய்க்கு இறப்பவர்கள் உடல்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படாமல் ஆங்காங்கே வார்டுகளில் பார்சல் செய்து வைக்கப்படுகின்றன.
இது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. அதனால், கரோனா நோயால் இறப்பவர்கள் உடல்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை தலைவர்கள் சுப்ரமணியன், சீமான் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் சிக்கந்தர், ஆகியோர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை வைப்பதற்கு தனி இடம் அல்லது வார்டு அமைத்து பிறருக்கு தொற்று ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மதுரையில் நடுத்தர மக்களே போதுமான மருத்துவ சிகிச்சை இன்றி இந்த நோய்க்கு உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர்.
அதைத் தடுக்கும் விதமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை, உணவு, மருத்துவ, பணியாளர் குறைவு உள்ளிட்ட குறைபாடுகளை நீக்கி சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதிக படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.
மதுரையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்காவிட்டாலும் பொது மருத்துவம் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.