பூவை ஜெகதீஷ்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

ஊரடங்கு காலத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள்; கடுமையான நடவடிக்கைகளை எடுத்திடுக; அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் இன்று (ஜூலை 16) வெளியிட்ட அறிக்கை:

"உலகம் முழுவதிலும் மக்கள் கரோனா நோய்த் தொற்றினால் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவித்து சீர்குலைந்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த சுகாதாரப் பேரிடர் காலத்திலும் கூட, தமிழகத்தில் பன்னெடுங்காலமாக அடங்காமல் இருக்கும் சாதிய வெறி தலைவிரித்து ஆடிவருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளின் பட்டியல் இதோ:

கொலைகள்- 14

மலக்குழி மரணம்- 4

பாலியல் வன்புணர்வு - 5

சாதி ஆணவப்படுகொலைகள்- 2

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்- 5

தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை- 3

கல்வி நிலையங்களில்சாதியப் பாகுபாடு- 1

மயானம், மயானப்பாதை பிரச்சினை- 2

அரசுப் பணியாளர்களின் பாரபட்சம்-3

கொத்தடிமை- 1

தாக்குதல்கள்- 41

என வெளியாகியுள்ள பல்வேறு விதமான தகவல்கள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கக் கூடியதாக இருக்கின்றது.

பேரிடர் காலத்திலும் பேயாய், சாதி வெறி பிடித்து அலையும் கல்நெஞ்சம் படைத்தவர்களின் கொடூரச் செயல்களில் வெளிவந்தவை சிலவே.

மறைக்கப்பட்டுள்ள பல சாதிய ரீதியான வக்கிர வன்செயல்கள் இன்னும் உலகத்தின் கவனத்திற்கே வரவில்லை என்பதுதான் கவலைக்குரிய செய்தி.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சாதிய வன்கொடுமைகளும், ஆணவக்கொலைகளும் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மறுபக்கம் மலக்குழி மரணங்களும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்கின்ற செய்தி உண்மையிலே மனித இனத்தைத் தலைகுனிய வைக்கின்றது.

பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும் இன்னமும் பல வகைகளிலும் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது.

குற்றங்களுக்கான அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் கூட குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியமும் மறைமுக ஆதரவுமே ஆகும்.

சாதிய ரீதியாக மக்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படும் நிலையில், சமூக நீதிக்கு எதிரானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் ஒரே நோக்கம் மற்றும் குறிக்கோள்.

அவரின் வழியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஊரடங்கு காலத்திலும் அடங்காத சாதி வெறியினை வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளையில் அரசு நிர்வாகமும் ஆதிக்கப்போக்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுத்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகின்றது"

இவ்வாறு பூவை ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT