விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இன்று அதிகாலை கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், ஓட்டுநர் ஒருவர் என 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அடுத்த சூடுவிளையத்தான் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் சென்னை, ஆவடிக்கு இன்று (ஜூலை 16) அதிகாலை காரில் பயணம் செய்தனர் .
அப்போது, திண்டிவனம் அடுத்த குச்சுக்கொளத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது கார் நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதியது .
இதில் முருகன் (40), முருகராஜ் (38), ஸ்ரீ முருகன் (37), மலர் (35), முத்து அனிஷா (8) உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இத்தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி உள்ளிட்ட திண்டிவனம் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த முத்து ஹரீஷ் (6), முத்து மனிஷா (8) ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.