மதுரையில் உள்ள பரவை காய்கறி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வது தொடர்பாக கப்பலூர் துணைக்கோள் நகரத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறி சந்தைகளில் மதுரை அருகே பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது வடமாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவிலேயே கரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்ட்டிராவில் இருந்து கடந்த மாதம் மத்தியில் வெங்காயம், உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பல லாரிகள் மதுரை பரவை சந்தைக்கு வந்துள்ளன.
இதில் வந்த டிரைவர்கள், லோடுமேன்கள் மூலம் மதுரை பரவை சந்தை வியாபாரிகளுக்கு கரோனா பரவியது. அதில், 25 வியாபாரிகளுக்கு இந்த தொற்று பரவியது கண்டறியப்பட்டது.
அதனால், கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பரவை சந்தையை மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆனால், அதற்குள் இந்த சந்தையில் காய்கறி வாங்கிய சில்லறை வியாபாரிகள் மூலம் மதுரை மாநகராட்சிப்பகுதியில் இந்த தொற்று நோய் வேகமெடுத்தது.
சென்னைக்கு கோயம்பேடு மார்க்கெட் போல் மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் இந்த தொற்றுநோயின் பரவலுக்கு பரவை காய்கறி மார்க்கெட் முக்கியக் காரணமானதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், பலதரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கையை அடுத்து, மதுரை பரவை மார்க்கெட்டை கப்பலூருக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, கப்பலூர் துணைக்கோள் நகரத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.