இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு இலங்கை அரசின் குறுக்கீடே காரணம் என தமிழக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தமிழகம், இலங்கை மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை, கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த 12-ம் தேதி கொழும்பில் நடந்தது. இதில் சுமுக முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழக மீனவ பிரதிநிதிகள் இலங்கையில் இருந்து ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பினர். சென்னைக்கு புதன்கிழமை வந்த மீனவ பிரதிநிதிகள், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை சந்தித்துப் பேசினர். பேச்சுவார்த்தை விவரங்களை எடுத்துக் கூறினர்.
அதன்பின் நிருபர்களிடம் மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:
மீனவர்களின் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்விக்கு இலங்கை அரசின் குறுக்கீடே காரணம். விரும்பிய பகுதியில் மீன் பிடிப்பதற்கான தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக இலங்கை மீனவர்கள் முதலில் தெரிவித்தனர். பேச்சு சுமுகமாக முடியும் நேரத்தில், இலங்கை அரசின் குறுக்கீட்டால் தோல்வியில் முடிந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.