சிவன் 
தமிழகம்

அடர்ந்த வனத்தில் 10 ஆண்டுகள் நடந்தே சென்று தபால் பட்டுவாடா- அயராது சேவையாற்றி பணி ஓய்வு பெற்றார் சிவன்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ ட்விட்டரில் பதிவிட, சிவனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் சிவன் கூறியதாவது:

35 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடர்ந்த காடுகளுக்குள் நடந்து சென்று தபால்களை கொண்டு சேர்த்துள்ளேன். பள்ளி படிப்பை முடித்ததும், தபால்துறையில் வேலை கிடைத்தது.

15 கி.மீ. தூரம் அடர்ந்த காடு

1985-ம் ஆண்டு வெலிங்டன் தபால் நிலையத்தில், தபால் தலை விற்பனையாளராக பணியில் சேர்ந்தேன். 2010-ம் ஆண்டு ஹில்குரோவ் தபால் நிலையத்தில் தபால்காரராக பணிமாறுதல் கிடைத்தது. சுமார் 15 கி.மீ. தூரம் காட்டுக்குள் உள்ள ஒற்றையடி பாதையில் தனியாக நடந்து சென்று கடிதங்களையும், பண அஞ்சல்களையும் கொண்டு சேர்க்கும் வேலை.

பத்தாண்டுகள் காட்டுக்குள் பயணம் செய்து தபால்களை விநியோகித்து வந்தேன்.

ஆரம்பத்தில் வன விலங்குகளை பார்க்கும்போது பயம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின் இரண்டு அடி தூரத்தில் யானைகளையும், காட்டெருமைகளையும் கடந்து செல்ல பழகிவிட்டேன். பணியில் சேர்ந்த சமயத்தில்தான், குன்னூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டமும் அதிகரித்திருந்தது. யானைகள் அதிக மோப்ப சக்தி வாய்ந்தவை. மனிதன் என அவைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, யானைகளின் காய்ந்த சாணத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வேன்.

தபால்களை பெற்றுக்கொள்ளும் பழங்குடி மக்கள், எனக்காக தரும் தேநீரின் சுவையும், அவர்களின் அன்பும் என்றும் என் நினைவில் இருக்கும்.

கனவு, லட்சியம், அன்பை சுமந்தேன்

காட்டுக்குள் பயணிக்கும் இந்த வேலை வேண்டாம் என குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட பலர் அறிவுறுத்தினர். இருப்பினும் தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி அஞ்சல்களை கொண்டு சேர்த்தேன். காரணம், என் தபால் பையில் இருக்கும் அந்த அஞ்சல்களும், கடிதங்களும் பலரின் எதிர்பார்ப்பு, கனவு, லட்சியம், அன்பு ஆகியவற்றை சுமக்கிறது. அதை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. பணி ஓய்வு பெறுகிறேன் என கிராமத்தினர் சிலரிடம் சொன்னதும், அவர்கள் அழுதுவிட்டனர். எனது வேலையை சிறப்பாக செய்துள்ளேன் என நிறைவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் பணியிலிருந்து சிவன் ஓய்வு பெற்றார். கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், இவரது பணி ஓய்வு குறித்து யாரும் அறியவில்லை.

இந்நிலையில், சிவனின் சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிவு வெளியிட, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உட்பட பலரின் வாழ்த்துகளும் சிவனுக்கு குவிந்து வருகின்றன.

பள்ளி பாடப் பிரிவு மாற்றம் செய்யப்பட்டால், இவரது வரலாற்றை அதில் சேர்க்க வேண்டும் எனவும், அவர் பணியாற்றிய தபால் நிலையத்துக்கு D Sivan India Post Office என பெயர் மாற்ற வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT