கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
யூ-டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் செய்யப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் மீதும், அதன் பேச்சாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேனலை தடை செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோவெளியிட்டதாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.