காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழை பெண்களுக்கு கரோனா நிவாரண பொருட்களையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் மற்றும் நகைக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கையில் முதல்வர் பழனிசாமி உடனடி அக்கறை காட்ட வேண்டும். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். மோடி அரசு இதைப் பின்பற்றாததால் தற்போது மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் சேகர், நகரத் தலைவர் எஸ்.சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் சிவக்குமார் மற்றும் வட்டார தலைவர்கள் கலந்துகொண்டனர்.