எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ரூ.5 கோடியே 22 லட்சம் பணம் இருந்தது போலீஸாரின் வாகன சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் நேற்று போலீஸார் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.
அப்போது, காரில் இருந்த 3 பேர் திடீரென தப்பி ஓட முயன்றுள்ளனர். போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர், காரை முழுமையாக சோதனையிட்டபோது 4 பைகளில் ரூ.5.22 கோடி இருந்தது தெரியவந்தது. போலீஸார் அதை பறிமுதல் செய்தனர்.
யாருக்காக இந்தப் பணம் கொண்டுசெல்லப்பட்டது என்பது குறித்து ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிடிபட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர். வருமான வரித்துறையினரும் அந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.