மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்த பெண் ஆய்வாளரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, தலைமை செயலககாலனி காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த 12-ம் தேதி, புரசைவாக்கம் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரில் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள குப்பை மேட்டின்அருகே ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டார். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று குளிக்கவைத்து, புத்தாடை அணியச் செய்தார்.
அந்தப் பெண்ணை விசாரித்ததில் அவரது பெயர் பாரதி(40) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புளியந்தோப்பில் உள்ளபாரதியின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,பாரதியை வீட்டில் சேர்க்க அவர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, அப் பெண்ணுக்கு கரோனா பரிசோதனை செய்து, சூளை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் காப்பகத்தில் ஆய்வாளர் ராஜேஸ்வரி சேர்த்துள்ளார்.
இதையறிந்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து, பாராட்டி வெகுமதி அளித்தார்.
ஆய்வாளர் ராஜேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலையோரம் ஆதரவற்ற நிலையில் இறந்துகிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு, இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.