மக்கள் ஒத்துழைப்பின்றி கரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு விழிப்புணர்வு கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:
முதல்வரின் அறிவுரைக்கேற்ப மதுரையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம், காய்ச்சல் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியில் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடக்கிறது. இது தற்போது கிராமப் புறத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் வீடுகளுக்கேச் சென்று வழங்கப்படும்போது, அவர்களுக்குத் தேவையான சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் துவக்கத்திலேயே அறிகுறி கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் மற்றவர்களுக்கு பரவல் தடுக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்து மதுரையில் தான் அதிக பரிசோதனைகள் நடக்கின்றன.
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், மதுரையிலும், பிற மாவட்டங்களிலும் எடுக்கப்படும் மாதிரிகளில் 10 சதவீதமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதி, சவாலான இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் சிகிச்சைக்குப் பின், வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. தொற்றைத் தடுக்க, அனைத்து அலுவலர்கள், தன்னார்வலர்களும் சேவை மனப்பான்மையோடு அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி, நோய் பரவலை கட்டுப்படுத்துவது கடினம். அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் செல்வோர் முகக்கவசம், சமூக விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆட்சியர் டி.ஜி.வினய், ஆணையர் விசாகன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.