கரோனா நோய்த்தொற்று தடுப்புக் காலத்தில் கூட்டுறவு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்கும் என அறிவித்துவிட்டு, இப்போது அவை கடன் வழங்குவதை நிறுத்தியிருப்பது மக்களைக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி, மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வழங்கி வந்த நகைக் கடன்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய் பெருந்தொற்று பரவி வரும் சூழலில், பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் கைவசம் உள்ள நகைகளைக் கூட்டுறவு வங்கிகளில் வைத்து, குறைந்த வட்டியில் கடன்பெற்று வந்தனர். இனி இவர்களின் பணத் தேவைக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி கும்பல்களை அணுக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு காலத்தில் கூட்டுறவு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்கும் என அறிவித்துவிட்டு, இப்போது அவை கடன் வழங்குவதை நிறுத்தியிருப்பது மக்களைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
காரணம் கேட்டால் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்துவிட்டது என்றும், இல்லை இல்லை கரோனா பாதித்ததால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இது எதுவும் முதல்வரின் சேலம் மாவட்டத்திற்குப் பொருந்தாது, அங்கு வழக்கம்போல் கடன் வழங்கப்படும் எனப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த முரண்பட்ட செய்திகளைக் கவனித்தால் அதிகார வர்க்கத்தில் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற கட்டறுந்த நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்ற ஆழமான சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.