கரோனா பொதுமுடக்கத்தால் அரசியல் கட்சிகளால் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை. இந்தக் குறையைப் போக்க தமிழக பாஜக இணையப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திவருகிறது.
இக்கட்டான இந்தக் கரோனா சூழலுக்கு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. அதனை முன்னிட்டு மத்திய அரசின் சாதனைகளையும் இணைய வழியில் பரப்புரை செய்துவருகின்றனர் பாஜக நிர்வாகிகள்.
அரசியல்வாதிகள் பல்வேறு இடங்களிலும் சுற்றிச்சுழன்று நிவாரணம், போராட்டம் என ஈடுபடுவதால் அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கரோனாவுக்குப் பயந்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அரசியல் களத்துக்குப் போகாமல் இருக்கமுடியும் என்ற அச்சமும் கவலையும் அரசியல்வாதிகள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.
இந்த நிலையில்தான் தமது அரசியல் பிரச்சாரத்துக்கு இணையத்தைப் பெரும் பலமாக நம்புகிறது பாஜக. இதைத் தொடர்ந்து ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசின் ஓராண்டு சாதனைகள் இணைய வழியில் பரப்புரை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரான சவார்க்கர் 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசுகையில், “மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நூற்றாண்டு பேசும் சாதனையை ஓராண்டில் நிறைவு செய்திருக்கிறார் மோடி. முந்தைய ஆண்டுகளில் எல்லாம் சாதனைகளை விளக்கிப் பொதுக்கூட்டங்கள் நடத்துவோம். ஆனால், இப்போதைய சூழலில் கூட்டம் நடத்த முடியாது. அதனால்தான் பிரச்சார உத்திகளில் மாநிலத் தலைமை சில புதுமைகளைச் செய்தது.
அதன்படி தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே இணையதளப் பிரிவுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே செயலி வழியாக சாதனை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மாநில நிர்வாகி ஒருவர் பேசும் வண்ணம் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த அரை மணி நேர நிகழ்ச்சியில் விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள், மகளிர் என ஒவ்வொரு தரப்புக்கும் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது எனத் தெளிவாக விளக்கப்பட்டது. இதை இப்போது நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம். பாஜகவின் நிர்வாகிகள் தங்கள் பகுதி மக்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன் வழியாகவும் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்லும் தனித் தனிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பணி செய்யவும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 9 பொறுப்பாளர்கள் உள்ளனர். இதுபோக மத்திய அரசின் சாதனை விளக்கக் கையேடும் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடத்தி அரசின் சாதனைகளைப் பேச முடியாததால் இப்போது சமூக வலைதளங்களின் ஊடே அந்தப் பணியைச் செய்கிறோம். கரோனா எப்போது முற்றாக நம்மைவிட்டு விலகும் என்பது தெரியாத நிலையில் வரும் தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றும் என ஊகிக்கிறோம். எனவே அதற்கேற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முன்னோட்டம்தான் இவை அனைத்தும்” என்றார் சவார்க்கர்.