பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா வழக்கமான உற்சாகம் இன்றி விருதுநகரில் இன்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
விருதுநகர் சுலோச்சனா தெருவில் காமராஜர் வாழ்ந்த வீடு உள்ளது. இதனை தமிழக அரசு தற்போது பராமரித்து வருகிறது. காமராஜர் இல்லத்தில் அவரது சிலை மற்றும் அவர் உடுத்திய ஆடைகள், பயன்படுத்திய பொருள்கள், பல்வேறு தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
காமரஜார் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி ஆண்டுதோறும் கல்வித் திருவிழாவாக வெகு சிறப்பாக கொண்டப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடி விழா நடத்த தடை விதிக்கப்பட்டதாலும், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்கள் யாரும் வராததாலும், ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமேடை விழாக்கள் நடத்தப்படாததாலும் காமராஜரின் 118வது பிறந்தநாள் விழா இன்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
இன்று காலை காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் நூல் மாலை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர் கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு வணிகர் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ், காங்கிரஸ், பாமக, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று, மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மாலை அணித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, திமுக தெற்கு மாவட்டச் செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.