தமிழகம்

கட்சியினரை 'உடன்பிறப்பு' என்றழைப்பதா 'தோழர்' என்றா?- இணையத்தில் திருமாவளவன் - ஆ.ராசா கலந்துரையாடல்

கே.கே.மகேஷ்

பொதுமுடக்கக் காலத்தில் இணைய வழியாகத் தொண்டர்களுடன் உரையாடுவதில் முன்வரிசையில் இருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அவரது முகநூல் பக்கத்தில், தினமும் ஐந்து முறையேனும் நேரலையில் வந்துவிடுவார். முகநூல் நேரலை உரை, இணைய வழிக் கண்டனக் கூட்டங்கள், நிவாரணம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தல், தொண்டர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றுடன் அவர் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் பற்றிய கலந்துரையாடலும் அவ்வப்போது நேரலையாக நடைபெறுகிறது.

‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் ஒரு பகுதியான ‘உறவு விளிப்பும்... உரிய மதிப்பும்’ என்ற தலைப்பிலான கட்டுரை பற்றிய கலந்துரையாடலுக்கு திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அழைக்கப் பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று ஆ.ராசா பேசுகையில், “எழுச்சித் தமிழர் திருமாவின் இந்தக் கட்டுரையை வாசித்து நான் வியந்து போனேன். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு அல்ல... இந்தியர்கள், மனிதர்கள் என்கிற பொதுத்தளத்திற்கு, உலகளாவிய சகோதரத்துவத்தை நோக்கி நான் நகர்கிறேன் என்றாரே அம்பேத்கர், அப்படியான நோக்கத்துடன் உழைப்பவர் திருமா.

படித்த எல்லோரும் சிந்தனையாளர்கள் இல்லை. ஆனால், திருமா அரசியல் கட்சியின் தலைவராக மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக மட்டுமல்ல, சிறந்த நாடாளுமன்றவாதியாக மட்டுமல்ல, தன் பரந்து விரிந்த அறிவால் ஒட்டுமொத்த சமூகத்தையும் மானுடத்தை நோக்கி நகர்த்தும் சிந்தனையாளராக இந்த நூலில் வெளிப்படுகிறார்.

வெற்றிகரமான ஒரு அமைப்பாக்கத்திற்கு உடன் பணியாற்றுவோருக்கிடையில் நம்பகமான நல்லுறவு தேவை. களப்பணியாளர்களிடையே அத்தகைய நம்பிக்கை மலர்வதற்கும், வளர்வதற்கும் ஒருவருக்கொருவர் உரிய மதிப்பை அளித்தல் வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக விளக்கியிருக்கிறார் திருமா. ஒரு அமைப்பின் உறுப்பினர்களிடையே, வயது, படிப்பு, பதவி, பணம் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், அதற்குள்ளாக எப்படி ஒருவரை ஒருவர் மரியாதையாக அழைப்பது என்று பாடமெடுத்திருக்கிறது இக்கட்டுரை. எனக்கும் என் மகளுக்கும் இடையில்கூட உணவு, உடை, பேச்சு என்று எல்லாவற்றிலும் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. இந்தக் கட்டுரையை அமைப்பையும் தாண்டிய வாழ்வியல் சிந்தனையாகக் கருதலாம்” என்றார்.

உரையாடல் நிகழ்வில் ஆ.ராசாவுடன் கலந்துரையாடிய விசிக தொண்டர்களில் ஒருவர், “கட்சியினரை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு ஆ.ராசா, “திராவிட இயக்கத் தந்தை பெரியார், ‘தோழர்களே’ என்று அழைத்தார். அறிஞர் அண்ணா, ‘தம்பி’ என்று குடும்ப உறவோடு அழைத்தார். அதில், தன்னைவிட வயதில் மூத்தோரும், பெண் பாலினத்தவரும் விடுபடுவதை உணர்ந்து, ’உடன்பிறப்பே’ என்று அழைத்தார் கலைஞர். அதுதான் எங்களுக்குப் பிடித்தமானது. உங்கள் கட்சியில் எப்படி அழைக்க வேண்டும் என்பதைத் திருமாதான் சொல்ல வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய திருமா, “அண்ணன், தம்பி என்ற உறவுமுறை விளிப்புகள் உடன் பணிபுரிவோருக்கு இடையில் ஓரளவுக்கு நெருக்கத்தையும், இணக்கத்தையும் உருவாக்கும். எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மாறுபாடுகள் இருந்தாலும் தன்னைப் போல் பிறரும் மனிதர்களே என்று ஏற்கிற ஏற்பும், உரிய மதிப்பும்தான் சமத்துவத்திற்கான அடிப்படையாகும்.

ஆனால், அண்ணன் தம்பி என்று அழைக்கிறபோது வயதில் மூத்தோர், இளையோர் என்கிற வேறுபாடு இருப்பதையும், அதன் வாயிலாக, நான் மேல், நீ கீழ் என்கிற சின்ன வேறுபாடு இருப்பதையும் காண முடிகிறது. எனவே, தோழர் என்று அழைப்பதுதான் சிறந்தது. இது வயது வேறுபாடுகளையும் துடைத்து சமத்துவ உறவை வெளிப்படுத்துகிறது” என்றார்.

SCROLL FOR NEXT