கல்வி எது என்று அறியாமல் புத்தகத்திற்குள்ளும், கணினிக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம். வெளியிலும் உள்ளது கல்வி என இளைஞர் திறன் தினத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day) இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது இளைஞர்களே. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 14 முதல் 18 வயதுள்ள 70 சதவீதக் கற்றல் பணியில் உள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
உலக இளைஞர் திறன் மேம்பாடு குறித்து சிந்திக்கும் நேரத்தில் உலக அளவில் 5 -ல் ஒரு இளைஞர் வேலை இல்லாமல், பயிற்சி இல்லாமல், கல்வி கிடைக்காமல் உள்ளனர். இதில் 5-ல் 4 பேர் பெண்கள்.
இளைஞர் திறன் மேம்பாட்டுப்பணிக்காக உலக அளவில் பல முயற்சிகளை அந்தந்த நாடுகள் எடுத்து வருகின்றன. திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தினத்தையொட்டியும் பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் இன்று உரையாடினார்.
இந்நிலையில் நடிகர் கமல் இளைஞர் திறன் நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம்.
திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிடச் சிறந்த நேரமில்லை”.
இவ்வாறு கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.