தமிழகம்

16 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் செவ்வாய்க்கிழமை யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கட்டைக்காடு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு தனித் தனியாக சிறைபிடித் தனர்.

கைப்பற்றப்பட்ட மீனவர்களின் 3 விசைப்படகுகளை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தமிழக மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களிடம் யாழ்ப்பாணம் மீன் வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமநாத புரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நாகப் பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எனத் தெரியவந்தது. இதில் 17 வயது சிறுவனும் அடங்குவார்.

செவ்வாய்க்கிழமை மதியம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினத் தைச் சேர்ந்த 9 மீனவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர். நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 15 வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘இந்த விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிப்பதோடு, 16 மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக இலங்கையின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT