தமிழகம்

சுக்கு டீ விற்ற மாணவியின் குடும்பத்துக்கு ஆட்சியர் உதவி

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் குடும்பத்தில் நிலவும் வறுமையைப் போக்க, கிருஷ்ணகிரியில் ஆண்களைப் போன்று உடையணிந்து சுக்கு டீ விற்பனை செய்த 7-ம் வகுப்பு மாணவி குறித்த செய்தி கடந்த 8-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. ஆவின் பாலகம் அமைக்க பலமுறை விண்ணப்பித்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என மாணவியின் தாயார் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதன் எதிரொலியாக அச்சிறுமியின் குடும்ப நிலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து. அச்சிறுமியின் தாயாருக்கு, மாவட்ட ஆட்சியர் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆவின் பாலகம் அமைக்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுப்பதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவரும், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான பரிதாநவாப், அக் குழந்தைகளின் தாயை நேரில் சந்தித்து, ரூ. 10 ஆயிரம் நிதி வழங்கி உள்ளார். அச்சிறுமியின் தாயார் கூறுகையில், எங்களது வறுமை நிலை குறித்து வெளியான செய்தியால், குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளது என நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT