கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்களில் பணியாற்றுவோர், மற்றும் வந்து செல்லும் மக்களுக்கு கரோனா பரவி வருகிறது. ஒரே நாளில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 1700 பேரை தாண்டியுள்ளது.
இதுவரை 60707 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று அதிகமாக உள்ளதால் நகர, கிராம பகுதிகளில் கரோனா பரிசோதனை மேலும் வேகப்படுத்துவதுடன், பரிசோதனை முடிவுகளை தாமதமின்றி தெரிவித்து தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோட்டாறு, வடசேரி, மணவாளகுறிச்சி காவல் நிலையங்களில் போலீஸாருக்கு கரோனா தொறறு ஏற்பட்டு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நித்திரைவிளை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ., மற்றும் இரு போலீஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு ஏட்டுக்கு கரோனா இருந்ததை தொடர்ந்து குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தபோது, அவரின் மகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யபப்டிருந்தது.
நித்திரைவிளை காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலும் 8 பேரின் சளி, ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கொல்லங்கோடு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 18 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் உடல்நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.