தமிழகம்

தடையை மீறி நடந்த திருப்புவனம் கால்நடை சந்தை: வெளியூர் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தடையை மீறி கால்நடை சந்தை நடந்தது. அதில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மதுரைக்கு அருகிலேயே உள்ள திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி, கால்நடை சந்தை நடக்கும்.

இந்த சந்தைக்கு மதுரை, மானாமதுரை, சிவகங்கை, மேலூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவர்.

கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக திருப்புவனம் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. ஜூலை 17-ம் தேதி ஆடி மாத பிறப்பு என்பதால் இன்று திடீரென தடையை மீறி சந்தை கூடியது.

ஆடு, மாடு, கோழிகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர்.

ஆனால் குறைவான ஆடு, மாடுகளே விற்பனைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது. தடையை மீறி நடந்த சந்தையில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மேலும் அதிகாரிகளோ, போலீஸாரோ வியாபாரிகளை கட்டுப்படுத்தவில்லை. இதனால் திருப்புவனம் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து திருப்புவனம் மக்கள் கூறுகையில், ‘ கரோனா அச்சத்தால் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி நடந்த கால்நடை சந்தையில் வெளியூர் வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் கூட அணியவில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை,’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT