மதுரையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மட்டுமே 2700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே ஆரம்பம் முதல் தற்போது வரை மிக அதிக எண்ணிக்கையில் தினமும் ‘கரோனா’ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
மாநிலத் தலைநகரம் என்பதாலும் அரசின் நேரடி பார்வையில் இருப்பதாலும் சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்கு சுகாதாரத் துறையால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அதனால், தற்போது சென்னையில் இந்தத் தொற்று நோய்ப் பரவல் குறைய ஆரம்பித்துள்ளது. அதேவேளையில் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் இந்த நோய் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கடந்த மாதம் ஆரம்பம் வரை வெறும் 150 முதல் 250 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. அதனால், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் திமுக எம்எல்ஏ-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், மதுரையில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த ‘கரோனா’ தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதன்பிறகு 150 முதல் 200 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் முதல் 3 ஆயிரமாக இந்த பரிசோதனை எண்ணிக்கை இன்னும் உயர்த்தப்பட்டதால் தற்போது புதிய நோயாளிகள் எண்ணிக்கை தினமும் சராசரியாக 350 என்றளவில் உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் மதுரை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். மாநகராட்சியில் மட்டுமே 2700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
100 வார்டுகளில் 150 மருத்துவ முகாம்கள் அமைத்தும் 11 நடமாடும் வானங்களில் சென்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நோயாளிகளுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்கின்றனர்.
அதனால், இன்று எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் இன்னும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.