தமிழகம்

யூரியா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் மனு

எஸ்.கோமதி விநாயகம்

யூரியா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் மனு வழங்கினர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து ஆகியோர் காய்கறி மாலை அணிந்து வந்தனர். அவர்கள் யூரியா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

தொடர்ந்து அவர்கள் தங்களது மனுவை அங்குள்ள புகார் பெட்டியில் செலுத்தினர். மனுவில், இந்தியாவில் உரங்கள் தட்டுப்பாடு உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து ஐ.பி.எல். நிறுவன யூரியா கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுக வழியாக இறக்குமதி செய்யப்பட்டது.

இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள யூரியா தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. யூரியா 45 கிலோ எடை கொண்ட மூடையாக விற்பனை செய்ய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், ஒரு மூடையில் 39 அல்லது 40 கிலோ மட்டுமே எடை உள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே புகார் மனு வழங்கினோம்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால், வேளாண்மை அதிகாரிகள் முறையாக விசாரணை செய்யவில்லை. கண்துடைப்பாக உள்ளது. அவர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள அறிக்கையில், சுமார் 3 ஆயிரம் மூடை எடை குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 200 முதல் 600 கிராம் வரை எடை குறைவாக உள்ளது. அதனை விற்பனை செய்ய தடை விதித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இது தவறான தகவலாகும். எனவே, தூத்துக்குடிக்கு கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா எவ்வளவு, விற்பனை செய்துள்ள ரசீது அல்லது விற்பனை பேரேடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியவரும். இதுதொடர்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விசாரணை நடைபெறவில்லை.

இதே ஐ.பி.எல். நிறுவனத்தின் 16:16 கலப்பு ஒரு மூடை உரம் 50 கிலோ இருக்க வேண்டும். ஆனால் எடை குறைவாக 45 கிலோ தான் உள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, தொடர்ந்து யூரியா, உர விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT