சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே லடாக்கில் பணிபுரியும் ராணுவவீரரின் தாய், மனைவியைக் கொன்றுவிட்டு 75 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டிலிருந்த 7 மாதg குழந்தையை மட்டும் கொள்ளையர்கள் விட்டுச் சென்றனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவவீரர் ஸ்டீபன் (32). அவர் தற்போது சீனாவுடன் எல்லை பிரச்சினை நடந்து வரும் லடாக் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து அவரது தந்தையும், ஓய்வு பெற்ற ராணுவவீரருமான சந்தியாகு (66). தாயார் ராஜகுமாரி (61), மனைவி சினேகா (30), அவரது 7 மாத பெண் குழந்தையுடன் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு சந்தியாகு அருகேயுள்ள தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். வீட்டிற்குள் சினேகாவும், குழந்தையும் தூங்கினர். வரண்டாவில் ராஜகுமாரி தூங்கினார். கதவை வெளிப்புறமாக பூட்டி சாவியைத் தலையனைக்குக்கீழே வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த கொள்ளையர்கள் ராஜகுமாரியை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் சினேகாவைப் படுக்கையிலேயே கம்பியால் தாக்கி கொன்றனர். ஆனால் குழந்தையை எதுவும் செய்யவில்லை. அதன்பிறகு இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 75 பவுன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடினர்.
தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால் அக்கம்,பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது இருவரையும் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.
ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகணன், சிவகங்கை எஸ்பி வருண்குமார் (பொ), டிஎஸ்பி அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் இளவரசன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எஸ்பி வருண்குமார் கூறுகையில், ‘‘5 தனிப்படை அமைத்துள்ளோம். சில தடயங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர்,’’ என்று கூறினார்.
ராணுவவீரரின் குடும்பத்திற்கு பாதுகாப்பில்லை:
ஸ்டீபன் தந்தை சந்தியாகு கூறுகையில், ‘‘எங்களது குடும்பமே ராணுவவீரர் குடும்பம் தான். எனது மற்றொரு மகன் ஜேம்ஸ்ராஜூம் ராணுவவீரர் தான். நாட்டைக் காக்கும் ராணுவவீரரின் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாதநிலை உள்ளது,’’ என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 82 பேர் கரோனாவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் போலீஸார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.